வடக்கிலிருந்து தெற்குச் செல்பவர்கள் மீதான பயணத் தடை : கவனிப்பார் எவருமே இல்லையா?
வீரகேசரி இணையம் 4/7/2009 1:41:54 PM - வடக்கிலிருந்து தென்பகுதிக்குச் செல்பவர்கள் குறிப்பாகத் தமது பிரயாணத்திற்கான நோக்கத்தை சரியான ஆவணங்கள் மூலம் தெளிவுபடுத்த முடியாத எவரும், மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்ய முடியாதிருப்பதாகப் முறைப்பாடு தெரிவிக்கப்படுகின்றது.
மரண வீடுகளுக்குச் செல்பவர்கள், திருமண வைபவங்களுக்குச் செல்பவர்கள் அவற்றுக்குரிய தந்தி மூலமான அறிவித்தல் மற்றும் திருமண அழைப்பிதழ்கள் போன்றவற்றைக் காண்பித்தாலும்கூட அவற்றை மதவாச்சி சோதனைச்சாவடியில் கடமையில் உள்ள பொலிசார் ஏற்றுக்கொள்வதில்லை என்று பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான தேவைகளுக்காகப் பயணிப்பவர்கள் பல தடவைகள் மதவாச்சி வரை சென்று திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுன்றது.
வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், உரிய கடவுச்சீட்டுடன் விமான பயணத்திற்கான டிக்கெட் இருந்தால் மட்டுமே மதவாச்சியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
திருமணமாகிய பின்னர், வெளிநாட்டில் உள்ள தமது கணவருடன் இணைந்து கொள்வதற்காக விசா பெறச் செல்லும் இளம் குடும்பப் பெண்களும் பியாணத்தைத் தொடர முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் கிடைப்பதில்லை எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.
நோயாளர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தோற்றத்தி்ல் தெரியாதவர்கள் என்னதான் ஆவணங்களை வைத்திருந்தாலும், அவர்களையும் சோதனைச்சாவடி பொலிசார் மதவாச்சி்யைக் கடந்து தென்பகுதிக்குச் செல்ல அனுமதிப்பதில்லை எனப் பலரும் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இதற்கிடையில் முக்கிய திணைக்களத் தலைவர்களாகப் பணியாற்றும் அதிகாரிகளும் தமது வாகனத்தில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக முன்னர் பிரயாணம் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்த அனுமதியும் தற்போது மறுக்கப்படுவதாக அதிகாரிகள் பலரும் தமது உயரதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முறையிட்டுள்ளனர்.
அதிமுக்கிய தேவைகளுக்காகவே தாங்கள் பிரயாணம் மேற்கொள்வதாகவும், இந்தப் பிரயாணத்தை மேற்கொள்வதற்குக் கூட மதவாச்சி சோதனைச்சாவடியில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
தமிழ் பேசும் மக்கள் மாத்திரமே இத்தகைய கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், வவுனியா மன்னார் மாவட்டங்களில் நிரந்தரமாக வாழ்ந்து வருபவர்களுக்கும் கூட இவ்வாறாக பிரயாண அனுமதி மறுக்கப்படுவது ஏன் எனப் பலரும் வினா எழுப்புகிறார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவர்களைப் பலமுனைகளில் தோற்கடித்து, அவர்களின் இராணுவ பலத்தை முடக்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களின் தேவைகள் மிகுந்த பிரயாணம் மதவாச்சி சோதனைச்சாவடியில் தடை செய்யப்படுவதேன் என்ற வினாவும் மக்கள் மத்தியில் எழுகின்றது.
இது குறித்து தமிழ்த் தலைவர்களோ அல்லது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாகக் கூறுகின்ற அரசியல் பிரமுகர்களோ பாராமுகமாக இருப்பது ஏன் என்றும் அவர்கள் வினவுகின்றார்கள். இவர்களின் இத்தகைய வினாக்களுக்குப் பதில் எப்போது கிடைக்கும்? யார் தருவார்கள்?
virakesari.lk
Intel agrees to give U.S. 10% stake in operations
for 3 timer siden
Ingen kommentarer:
Legg inn en kommentar