30.10.08
இலங்கைத் தமிழர்களுக்காக இத்தனை கரிசனம் காட்டும் நம்மூர்த் தலைவர்கள், உள்ளூரில் ஏற்கெனவே அகதிகளாக வந்து தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை மறந்து விட்டார்கள் போலும். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகக் கட்சிகள் காட்டும் திடீர் முனைப்பு, இங்குள்ள அகதிகளை உற்சாகமடைய வைத்துள்ள அதே நேரத்தில், `எங்களையும் கொஞ்சம் கவனத்தில் வைத்து உதவுங்களேன்' என ஏங்குகிறார்கள் அவர்கள்.
தமிழகத்தில் மொத்தம் சுமார் 120 இடங்களில் அகதி முகாம்கள் இருக்கின்றன. அதில் மதுரை அருகேயுள்ள உச்சப்பட்டி முகாமும் ஒன்று. அங்குள்ள அகதிகளின் நிலையை நேரில் பார்த்து வர நாம் அங்கு சென்றோம். குண்டும் குழியுமான பாதை. கனமழை பெய்தால் கரைந்து விடும் மண்குடிசைகள். இங்கேதான் அகதிகள் தங்கியிருக்கிறார்கள். முகாமில் போலீஸார் நடமாட்டத்தை நம்மால் பார்க்க முடிந்தது. ``போட்டோ, பெயர் எதுவும் வேண்டாம். பிரச்னையாகி விடும். கியூ பிராஞ்ச் போலீஸார் வந்து எங்களைத் துளைத்தெடுத்து வேறு முகாமுக்கு மாற்றி விடுவார்கள்'' என்ற பீடிகை கலந்த பயத்துடன் பேசத் தொடங்கினார்கள் அகதிகள்.
``நாங்கள் பதினெட்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்தோம். காடாய்க் கிடந்த இந்த இடத்தை அதிகாரிகள் காண்பித்தார்கள். நாங்கள்தான் வீடுகளைக் கட்டிக் கொண்டோம். இங்கே மின்வசதி கிடையாது. அதிகாரிகளிடம் கேட்டபோது, `பிழைக்க வந்த உங்களுக்கு எதற்கு மின்சாரம்?' என்று நக்கலாகக் கேட்டார்கள். மற்ற முகாம்களில் அரசு செலவில் மின்வசதி கிடைக்கிறது. இந்தநிலையில் நாங்கள் தற்போது சொந்தச் செலவில் மின்சாரம் பெற்று இங்கே ஜீவித்து வருகிறோம்.
மற்ற முகாம்களில் அரசு வீடு கட்டிக் கொடுக்கிறது.. இங்கு அதுவும் இல்லை. தொண்டு நிறுவனங்கள்தான் ஏதோ உதவிகளைச் செய்கிறார்கள். அகதிகளாக வந்த புதிதில் பலரிடம் நாங்கள் ஏமாந்தோம். இலங்கையில் சொத்துக்களை விற்று நகைகளாக மாற்றி எடுத்து வந்த எங்களிடம் இங்கே நகை பாலீஷ் செய்வதாகக் கூறி பலர் தங்கம் திருடினார்கள். அதுபோல குறைந்த விலைப் பொருளை எங்களிடம் அதிகவிலைக்கு விற்கும் கொடுமையும் நடந்தது. எங்கே கலவரம், வன்முறை நடந்தாலும் போலீஸார் உடனே முகாம் ஆட்களைப் பிடித்துப் போவது வழக்கமாகி விட்டது.
நாங்கள் எங்கே போனாலும் மாலை ஆறு மணிக்குள் முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். அப்படி வராவிட்டால் இரண்டு நாட்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருக்கும். அரசு அதன் உதவித் தொகையை நிறுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் ஆறுமணிக்குள் முடியும் வேலையை மட்டுமே நாங்கள் பார்க்க முடிகிறது. வேறு முகாமில் உள்ள உறவினரைப் பார்க்க நாம் போவதாக இருந்தாலும் சரி, வேறு முகாம்காரர் இங்கே நம்மைப் பார்க்க வருவதாக இருந்தாலும் சரி, கியூ பிராஞ்ச் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாக வேண்டும்.
சுமார் ஐநூறு வீடுகள் உள்ள இந்த முகாமில் ஒரேயொரு குடிநீர்க் குழாய்தான் இருக்கிறது. முன்பு மாதமொருமுறை வரும் அரசு டாக்டரும் இப்போது வருவதில்லை. எங்கள் ஆண்கள் வெளியே போய் கட்டட வேலை, பெயிண்ட் வேலை செய்து சம்பாதிக்கும் நிலையில், நாங்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று அரசு எச்சரித்து வைத்திருக்கிறது.
இலங்கையில் எங்களது உறவினர்கள் யாராவது இறந்தால் கூட இங்கே நாங்கள் கறுப்புக்கொடி கட்ட முடியாது. கறுப்பு பாட்ஜ் அணிய முடியாது. இலங்கை அரசைக் கண்டித்து இங்கே நாங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூட உரிமையில்லை. தமிழக கிராமப்புறங்களில் உள்ள `நூறு நாள் வேலைத் திட்டத்தின்படி' எங்களுக்கும் வேலை தந்தால் நன்றாக இருக்கும். அதுபோல அங்கன்வாடி, ஊட்டச்சத்து மையம், இலவச கேஸ் இணைப்பு போன்ற பயன்களை எங்களுக்கும் கிடைக்கச் செய்யலாமே.
வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்களுக்கு ஆறுமாதம் அல்லது ஓராண்டில் ஓட்டுரிமை கிடைக்கிறது. ஆனால் நாங்கள் இங்கு வந்து பதினெட்டு வருடமாகியும் ஓட்டுரிமை கிடையாது!'' என்று பொருமினர் அவர்கள்.
பெரம்பலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம்.
``நாங்கள் இங்கே வந்து இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொண்ணூறு குடும்பங்கள் இந்த முகாமில் இருக்கிறோம். அரசு சலுகை விலையில் தரும் மண்ணெண்ணெய், அரிசி போன்றவற்றை இங்குள்ள ரேஷன் கடைக்காரர்கள் சரியான அளவில் தருவதில்லை. அரிசியும் தரமானதாக இல்லை. கேட்டால், `அகதியாக வந்த உங்களுக்கு இது போதாதா?' என்பார்கள். நாம் யார்மேல் கோபப்பட முடியும்?
குடிநீர்தான் இங்கே முக்கிய பிரச்னை. பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வரும். ஒரு குடும்பத்துக்கு ஐந்து குடம். அவை தீர்ந்து விட்டால் வெளியே ஒரு குடம் தண்ணீரை மூன்று ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இங்கே அகதிகள் சிலர் தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்கிறார்கள். அங்கு சாப்பிடும் குடிகாரர்கள் சிலர் காசு கொடுப்பதே இல்லை. கேட்டால் வண்டியைக் கவிழ்த்துப் போட்டுவிடுவார்கள். அதோடு போலீஸ் தொல்லையை வேறு சமாளிக்க வேண்டியிருக்கிறது!'' என்றார் அவர்.
இலங்கை அகதிகள் மத்தியில் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றிய `போர்டு' தொண்டு நிறுவனத்தின் இயக்குனரும், வக்கீலுமான எஸ். சையதுவிடம் பேசினோம்.
``இங்குள்ள அரசியல்வாதிகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களே தவிர, இங்கு அகதிகளாக இருப்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. அந்தத் தலைவர்கள் அகதிகள் முகாமுக்குச் சென்று பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்களுக்கு இன்னும் சட்டரீதியாக அனுமதியளித்தால் அவர்களாவது தங்களால் முடிந்த உதவிகளை அகதிகளுக்குச் செய்வார்கள்.
அகதிகள் முகாம்களை அந்தந்தப் பகுதி பஞ்சாயத்தோடு இணைக்கலாம். அப்படிச் செய்தால் பஞ்சாயத்து மூலம் சில நன்மைகள் அகதிகளுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. தமிழகம் வந்து இருபதாண்டுகள் ஆன அகதிகளுக்கு வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்க வேண்டும். அவர்கள் வங்கிக் கடனைக் கட்டாமல் திடீரென இலங்கைக்குப் போய்விடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை. காரணம், `இலங்கையில் போர் முடிந்தாலும் அங்கு புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றவே ஆறு ஆண்டுகள் ஆகும்' என்கிறார்கள். அதுவரை அகதிகள் அங்கு போக முடியாத நிலையில் அவர்களுக்கு இங்கே நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்யலாமே?'' என்றார் சையது. சரிதானே?
ஸீ ப.திருமலை
படங்கள்: ராமசாமி
courtesy...kumudam.com
Hanwha pitches broad defense package to boost bid for Canada submarine
for 16 minutter siden
Ingen kommentarer:
Legg inn en kommentar